டாக்கா: தலைமறைவாக இருக்கும் முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் பொதுவெளியில் உரையாற்றியது குறித்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்ததாக பங்ளாதேஷ் தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தார் ஹசினா. இந்நிலையில், அங்கு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆகஸ்ட்டில் அவர் நாட்டைவிட்டுத் தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
ஹசினாவிற்கு எதிரான வழக்கில் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த பங்ளாதேஷ் நீதிமன்றம், அவரைத் தூக்கிலிடவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜனவரி 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது ஹசினாவின் உரை ஒலிபரப்பப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவில் ஹசினா உரை நிகழ்த்தியிருப்பது தமது அரசையும் மக்களையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்று பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) தெரிவித்தது.
“இந்தியத் தலைநகரில் அந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததும் கொலைகாரி ஹசினாவின் வெறுப்புப் பேச்சை ஒலிபரப்பியதும் பங்ளாதேஷ் மக்களையும் அரசையும் அவமதிக்கும் செயல்,” என்றும் தனது அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹசினாவைப் பேச அனுமதித்தது அபாயகரமான எடுத்துக்காட்டு என்றும் அது இருதரப்பு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுசின் தலைமையில் பங்ளாதேஷில் ஒருபோதும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடக்காது என்று தமது உரையில் ஹசினா குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இணையத்தில் ஒலிபரப்பப்பட்ட அவரது பேச்சை 100,000க்கும் மேற்பட்டோர் செவிமடுத்தனர்.
ஹசினாவை நாடுகடத்தும்படி இந்தியாவிடம் பங்ளாதேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.
கடந்த காலங்களில் ஹசினாவிற்கு இந்தியா ஆதரவளித்துவந்த நிலையில், அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டபின் பங்ளாதேஷுடனான அதன் உறவு சீர்குலைந்துள்ளது.

