ஒளிரும் வைரங்கள்... ஒளிந்திருக்கும் உண்மைகள்

5 mins read
14dea9bd-edb0-461f-9a87-951051c5b844
கோஹினூர் வைரம். - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 3

உலகிலேயே உயர்ந்த தரமுள்ள வைரம், அந்த கருப்பு தேசத்தில் வெட்டியெடுக்கப்படுகிறது.

ஆனால், தங்கள் நாட்டு வைரத்தை அந்த மக்களில் 98% பேர் கண்ணால்கூட கண்டது கிடையாது.

அணிகலனாகி அழகு சேர்க்கும் வைரத்திற்கு ‘போர் வைரம்’, ‘ரத்த வைரம்’ என அதிர வைக்கும் காரணிகள் உண்டு.

இந்தியாவில் வைரம் கிடைக்கும் இடம், தமிழகத்தில் வைரம் இருக்கும் என்கிற புவியியல் ஆய்வு.

- இப்படி பல்வேறு வைரத் தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாடு உலகில் அதிக வைரங்களை உற்பத்தி செய்யும் நாடு. இங்குள்ள ஜ்வானெங் மற்றும் ஓராபா, உலகின் முதல் இரண்டு பெரிய வைரச்சுரங்கங்கள் ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் ஏழு வைரச் சுரங்கங்கள் உள்ளன. இதில் ஒன்று வெனிஷியா சுரங்கம்.

இதை பிரபல வைர வர்த்தக நிறுவனமான ‘டி-பீர்ஸ்’ (De Beers) நிர்வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் காரட் வைரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

கிம்பர்லி சுரங்கத்தில் ஆண்டுக்கு 30 டன் வெட்டி எடுக்கப்படுகிறது.

அங்கோலாவின் சோரிமோ அருகே உள்ள கேட்டோகா திறந்தவெளி சுரங்கத்தில் இன்னும் 120 மெட்ரிக் டன் வைரங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நமீபியா நாட்டில் மணல் வண்டல் படிவங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்றன.

ரத்தக்கறை வைரம்

காங்கோ நாட்டில் பெரிய அளவில் வைரம் எடுக்கப்பட்டாலும், அதன் மீது ரத்தக்கறை படிந்ததால் மதிப்பிழந்துள்ளது.

அதென்ன ரத்தக்கறை வைரம்?

ஆப்பிரிக்க நாடுகளின் கொடூரமான உள்நாடு மற்றும் சகோதர நாடுகளுடன் நடத்தும் போருக்கு நிதியுதவி அளிக்க, இந்த வைரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சுரங்கத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

போரில் பல லட்சம் மக்கள் கொல்லப்படவும் இடம்பெயரவும் காரணமாக அமைந்தது. அதனால் இது ‘ரத்த வைரங்கள்’ என அழைக்கப்படுகிறது.

‘கோஹினூர்’ வைரம்

உலகின் வைரத் தேவைகளில் 65% ஆப்பிரிக்க வைரத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய வைரக்கற்களில் இந்தியாவின் ‘கோஹினூர்’ வைரம் மிகவும் புகழ்பெற்றது.

‘கோஹ் - இ - நூர்’ என்கிற பாரசீக மொழிச் சொல்லுக்கு, ‘ஒளிமலை’ என்று பெயர். கோஹினூர் வைரத்தின் எடை 21.12 கிராம்.

கோஹினூர் வைரம் ஆந்திராவில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் 11 மற்றும் 13ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பல கைகள் மாறி... தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகானிடம் வெகு காலம் இருந்த இந்த பெரு வைரம், 1849ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைக்குச் சென்றது. அவர்கள் அதன் எடையைப் பட்டைதீட்டி குறைத்து இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு வழங்கினர்.

தமிழகத்தில் வைரம்

மத்தியப் பிரதேசம் பன்னா இந்தியாவின் பெரும் வைரச்சுரங்கம். மொத்த தேவையில் 90% இங்கிருந்துதான் பெறப்படுகிறது.

ஆந்திராவின் பல்வேறு இடங்களில் கிருஷ்ணா, கோதாவரி நதிக்கரையில் வைரம் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தின் புவியியல் அமைப்பு வைரம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளுடன் இருப்பதால் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயினும், ஆய்வகங்கள் மூலம் செயற்கை வைரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வைரத்துக்கு ‘லேப் கிரோன் டயமண்ட்ஸ்’ (Lab Grown Diamonds) என்று பெயர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் செழித்திருந்தது. அதிலும், திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள நகரங்களில் செயற்கை வைரத் தொழில் நடந்து வந்தது.

‘கியூபிக் ஜிர்கோனியம்’ (cubic zirconiam) என்ற வேதிப் பொருளை 1900ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து பெருமளவில் உற்பத்தி செய்தது. இந்த வேதிப் பொருளில் இருந்தே செயற்கை வைரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த மூலப்பொருளை பர்மா நாட்டுக்கு அதிக அளவில் கொண்டு சென்று, ‘ரங்கூன் டைமண்ட்’ எனும் செயற்கை வைரத் தயாரிப்பு சக்கைப் போடு போட்டது.

பர்மா சென்ற திருச்சி குழு

திருச்சியைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட குழு பர்மா சென்று, செயற்கை வைரத் தொழிலை கற்றுக்கொண்டு வந்தனர். 1930ல் திருச்சியில் செயற்கை வைரப் பட்டை தீட்டும் தொழில் தொடங்கப்பட்டது.

நாளடைவில், திருச்சியைச் சுற்றிலும் புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இத்தொழில் விரிவடைந்தது.

திருச்சியின் செயற்கை வைரம் மக்களாலும், வியாபாரிகளாலும் வெகுவாக விரும்பப்பட்டது.

தங்க நகைகளில் பதிக்கப்படுவதே செயற்கை வைரங்கள்தான். ‘ஒரிஜினல்’ வைரம் ஒரு கேரட் சுமார் 80 ஆயிரம் ரூபாய். செயற்கை வைரமோ ஒரு கேரட் சுமார் 50 ரூபாய் மட்டுமே.

இயற்கை வைரங்களில் கிடைக்காத வடிவம், வண்ணம், மிளிரும் தன்மை இந்த செயற்கை வைரங்களில், மலிவு விலையில் கிடைத்ததால் வரவேற்பு அதிகமானது.

செயற்கை வைரங்கள் விற்பதற்கென்றே திருச்சியில் ‘டயமண்ட் பஜார்’ இயங்கி வந்தது.

நலிவுற்றுப்போன தொழில்

அன்று லட்சக்கணக்கானோர் இந்த வைரத் தொழிலில் ஈடுபட்டனர். இன்றோ... நூற்றுக்கணக்கானோர் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

காரணம், 1990களில் சீனாவில் இருந்து ஊடுருவிய செயற்கை வைரக்கற்கள்.

திருச்சி வைரக்கல்லைவிட, சீன வைரக்கல் இன்னும் மலிவு விலையில் கிடைத்ததால், திருச்சி செயற்கை வைர உற்பத்தி நசிந்தது.

சீனக்கல் விலை மலிவு என்றாலும் தரத்தில் மகாமட்டம். விலையைப் பார்ப்பவர்களுக்கு தரம் முக்கியமில்லையே!

ஜொலிக்கும் கோவை

கோவையில் ‘ஒரிஜினல்’ வைரத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. வைர நகைகள் செய்வதற்கென்றே இயந்திரங்களும் தொழில்சாலைகளும் நிறைய இருக்கின்றன. அதனால் கோவையில் பிரம்மாண்ட வைர நகை உற்பத்திப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்படுகிறது.

இயற்கை வைரங்கள் தோண்டியெடுப்பதில் கடுமையான மனித உழைப்பு, மனித உயிர்ப்பலிகள், அடிமைத்தன முறைகள், வேலைக்கேற்ற கூலியின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.

அத்துடன், பூமிக்கு அடியில் இருந்து தோண்டப்படும் தாதுக்களில் வைரம் பிரித்தெடுத்த பின்னர், கழிவுகளைக் கையாள்வது, இயற்கை வைரங்கள் வெளியிடும் அதிக வாயு ஆகியவற்றால் சுற்றுச்சுழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுக்கிறது.

ஆனால், செயற்கையாக ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் வைரங்களால் இத்தகைய பிரச்சினைகள் இல்லை. இவை ‘பசுமை வைரம்’ என அழைக்கப்படுகின்றன. அதனால் செயற்கை வைரங்களை உலகில் பல நாடுகளின் மக்கள் விரும்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

பெட்டிச் செய்தி:

மோடியால் பிரபலமான வைரம்

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் காலங்காலமாக செயற்கை வைர உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்குப் பெயர் பெற்றது. இந்த செயற்கை வைரம் தரத்தில் மிகவும் உயர்ந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய அதிபர் பைடனுக்குப் பரிசுகளை வழங்கினர்.

பைடன் மனைவி ஜில் பைடனுக்கு ‘கிரீன் டயமண்ட்’ (Green Diamond) எனப்படும் செயற்கை வைரத்தைப் பரிசாக வழங்கினார் மோடி. இந்த வைரம் சூரத்தில் தயாரிக்கப்பட்டது.

7.5 காரட் கொண்ட அந்த வைரம் முகேஷ் படேலின் ‘கிரீன் லேப்’பில் உருவானது. ஜில் பைடனுக்கு மோடி வழங்கிய வைரத்தின் மதிப்பு 15 லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டது அப்போது.

தற்போது சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வக வைரங்களை சூரத் நகரம் ஏற்றுமதி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்