கப்பல் விபத்து: காணாமல் போன 22 பேரைத் தேடும் பணியில் சீனா, இந்தியா

கப்பல் விபத்து: காணாமல் போன 22 பேரைத் தேடும் பணியில் சீனா, இந்தியா

ஒடிசாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கிப் பயணம் செய்த சரக்குக் கப்பல் கடந்த வாரம் வங்காள விரிகுடாவில் மூழ்கியது
படம்: ராய்ட்டர்ஸ்

26 Aug 2026 - 5:38 pm

2 mins read

மும்பை: கடந்த வாரம் வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்குக் கப்பலில் பயணம் செய்த 22 மாலுமிகளைத் தேடும் பணியில் இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைந்து சீன அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.

பனாமா நாட்டின் கொடியுடன் ஒடிசா மாநிலத்தின் பாரதீப் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஓஷன் வின்னர்’ (MV Ocean Winner) என்ற அந்தக் கப்பல், ஆகஸ்ட் 22ஆம் தேதி அவசர உதவிச் சமிக்ஞையை அனுப்பியது.

அக்கப்பலில் 20 சீனர்கள், மூன்று மியன்மார் நாட்டவர்கள், ஒரு பங்ளாதேஷியர் உட்பட மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திற்குக் கிழக்கே கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் சிக்கலில் சிக்கியதை அடுத்து, இந்திய அதிகாரிகள் மீட்புப் பணியை உடனடியாகத் தொடங்கினர்.

இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட அவசர எச்சரிக்கைச் சமிக்ஞையை மீட்புக் குழுவினர் கண்டறிந்த போதிலும், தப்பியவர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்தியக் கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அமித் உனியல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தார்.

சீனாவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து தேடி மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கப்பலிலிருந்த உயிர் காக்கும் படகு ஒன்று கண்டறியப்பட்ட போதிலும் அதில் எவரும் இல்லை. சீனாவைச் சேர்ந்த இரு கப்பல்களும் தேடும் பணியில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் மூழ்கியதற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகப்பல்விபத்துகடல்கடல்துறைசீனாஉலகம்