அனைத்து முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி

அனைத்து முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி

1 mins read
a7540aad-5210-49a0-8b57-c1d5b5b73c89
நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களும் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். - படம்: இந்தியா டுடே

கோல்கத்தா: ஒரு வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 340 வாக்காளர்களின் பெயர்கள் துணைநிலை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இருகட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பஷீர்ஹாட் தொகுதிக்கான துணைநிலை வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (மார்ச் 25) வெளியிடப்பட்டது. அதில் போரோ கோப்ரா எனும் சிற்றூரின் ஐந்தாவது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 340 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. அந்த 340 பேரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மது ஷஃபியுல் ஆலம் எனும் வாக்குச்சாவடி நிலை அதிகாரியின் பெயரும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இனத்தைக் காரணம் காட்டி தங்களது பெயர்களை நீக்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, நூற்றுக்கணக்கானோர் அந்த அதிகாரியின் வீட்டின் முன்பாகவும் வீதியிலும் இறங்கிப் போராடினர்.

செல்லத்தக்க 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தால் போதும் என்ற நிலையில், தங்களில் சிலர் மூன்று, நான்கு ஆவணங்களைச் சமர்ப்பித்தோம் என்றும் ஆயினும் பட்டியலில் பெயர் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட வாக்காளர்களில் ஒருவரான கஜிருல் மொண்டல் சொன்னார்.

இதனையடுத்து, தங்களுக்குத் தீர்வுகிடைக்க இவ்விவகாரத்தைத் தீர்ப்பாயத்திடம் கொண்டுசெல்ல இருப்பதாகத் திரு ஆலம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்