பாமகவில் அதிரடி: ஜி.கே.மணி நீக்கம்; உச்சகட்டத்தை எட்டிய உட்கட்சி மோதல்

2 mins read
c75ff796-affc-4757-a15a-cc7ec57c6bef
பாமக தலைவர் அன்புமணி, பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி. - படம்: சமயம் தமிழ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாமகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பாமகவிற்கு ‘நானே தலைவர்’ என இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகவே தற்போதைய நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

கட்சியின் நலனுக்கும் தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிற்கு விளக்கம் அளிக்காததால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாமகவினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக பாமகவின் தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. கட்சி இரண்டாகப் பிளவுபட்ட சூழலில், அவர் ராமதாஸ் தரப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில், “பாமகவின் நலனுக்காகத் தனது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகவும் கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவும் தயார்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், அன்புமணி தரப்புடன் எந்தக் கட்சியும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று இன்று (டிசம்பர் 26) காலை ராமதாஸ் தரப்பு நாளிதழ்களில் விளம்பரம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஜி.கே.மணி மீதான இந்த நீக்க நடவடிக்கை வெளியாகியுள்ளது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி தேர்தல் ஆணையம் தங்களை அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பினர் கூறுகின்றனர்.

இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்புமணிக்கு பாமகவின் தலைவர் என்ற உரிமையோ கட்சியின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்தும் உரிமையோ வழங்கப்படவில்லை என்றும் இது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் தரப்பினர் விவாதம் செய்கின்றனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறுகையில், “இருவருக்கும் இடையிலான பிரச்சினையைச் சிவில் நீதிமன்றத்தை அணுகித் தீர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, ராமதாஸ் - அன்புமணி இடையிலான பிரச்சினையைத் தேர்தல் ஆணையத்தால் தீர்க்க முடியாத சூழல் உள்ளது. அவர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்றார்.

நாளிதழ்களில் மாறி மாறி விளம்பரம் கொடுப்பதும் வார்த்தை மோதல்களில் ஈடுபடுவதும் கட்சிக்கு எந்த வகையிலும் பலனளிக்காது என்றும் இது நிச்சயம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்