தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தை மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம்

2 mins read
491dac18-c1c2-4cea-a45d-d0432c4a10fb
மேலிருந்து கீழே விழுந்த வேகத்தில் குழந்தை சற்று துள்ளி விழுந்து முழங்காலில் பின்னோக்கிச் சறுக்கியது. - படங்கள்: இணையம்

மும்பை: கட்டடத்திலிருந்து விழுந்த பின்பும் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று, சிறு காயங்களுடன் உயிர்தப்பியது.

மும்பையின் டோம்பிவ்லி நகரில் ஜனவரி 26ஆம் தேதி பகலில் இச்சம்பவம் நடந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

கட்டடத்தின் மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து குழந்தை கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பவேஷ் மாத்ரே என்ற இளையர் கட்டடத்தின் தரைத்தளத்தில் தம் நண்பரைச் சந்திப்பதற்காக நின்றுகொண்டிருந்ததாகவும் அந்த வேளையில் அவர் அண்ணாந்து பார்த்தபோது குழந்தை விழுவதைப் பார்த்ததாகவும் நம்பப்படுகிறது.

மாத்ரே மளமளவெனக் கட்டடத்தை நோக்கி ஓடும் காட்சி, கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் மற்ற சில வழிப்போக்கர்கள் பதற்றத்தில் ஓடுவதையும் காணொளியில் பார்க்க முடிந்தது.

இளையர் தமது கைகளில் குழந்தையைப் பிடிக்க முயன்றபோது குழந்தை அவரின் கைகளில் பட்டு தரையில் விழுந்தது.

கீழே விழுந்த தாக்கத்தில் குழந்தை சற்று துள்ளியபடி விழுந்து பின்னர் அதன் முழங்காலில் பின்னோக்கிச் சறுக்கியது.

குழந்தையை உடனே மாத்ரே தமது கைகளில் எடுத்துக்கொண்டார். அருகிலிருந்த ஒருவர் சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு உடனே உதவிக்கு ஓடினார்.

கீழே விழுந்தது பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தபோதும் குழந்தைக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தை கீழே விழுந்தபோது இளையரின் கை பட்டதால் விழும் வேகம் மெதுவடைந்ததாக நம்பப்படுகிறது.

தாம் கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி பந்தைப் பிடிப்பதால் அதுவே குழந்தையைத் தாவிப் பிடிக்கப் பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று இளையர் பகிர்ந்துகொண்டார்.

குழந்தையின் குடும்பத்தார் மாத்ரேக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்