விழுப்புரம்: அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இதன் ஆளுமைக்கு உட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை 7 வயது சிறுமி மாயமானார்.
உள்ளூர் காவல்துறையின் தனிப்படைகள் அமைக்கப்பட்டும் பலன் இல்லாததால் சிபிசிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. முப்பது நாள்களைக் கடந்தபோதும் சிறுமி மாயமான விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
வனப் பகுதியில் சிபிசிஐடி காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியபோது, எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடைத்தது. மேலும் திருட்டு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் அதிக அளவில் பதிவாயின.
குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இறப்பு, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகள் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகி வருவது காவல்துறையினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காண காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. இதையடுத்து காவல் நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, தடைகளை நீக்கி, வெற்றிபெற கணபதி ஹோமத்தை ஆய்வாளர் சுரேஷ்பாபு வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடத்தி இருக்கிறார்.
தனது மனைவி மற்றும் காவலர்களுடன் கணபதி ஹோமத்தை பயபக்தியுடன் அவர் நடத்தி முடித்திருக்கிறார். அதனை சத்தியமங்கலம் காவல் நிலைய காவலர்களே காணொளியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
