ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வெவ்வேறு இடங்களில் இரண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்தத் தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் மாடர்கம் என்னும் சிற்றூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதையடுத்து காவல்துறை, பாதுகாப்புப் படையினர் ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சண்டையில் 4 தீவிரவாதிகளும் 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
மேலும் நான்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படை முடுக்கிவிட்டுள்ளது.
மாடர்கம் சிற்றூரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஒரு வீட்டிற்குள் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்து, அந்த வீட்டை முற்றுகையிட்டு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் படை வீரர் ஒருவர் குண்டடிபட்டு, சிகிச்சையின்போது மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் உயர்மட்ட தளபதியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
கடந்த ஜூலை 15ஆம் தேதி காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் தீவிரவாதிகளுடன் தோடா மாவட்ட காடுகளில் நடந்த இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த சண்டையில் நான்கு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நேற்று நடந்த சம்பவத்துடன் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 21 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

