புதுடெல்லி: இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதால் டெல்லியில் பதற்றம் நிலவியது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜோதி நகரில், திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர்.
அங்குள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், தனது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகத் தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு இரு குழுக்கள் இடையே மோதல் மூண்டு, அது துப்பாக்கிச்சூட்டில் முடிந்ததாகத் தெரியவந்தது. காயம் அடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணை ஆணையர் அபிஷேக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
“ஜோதி நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது.
“சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோதி நகரில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.