புதுடெல்லி: வாரணாசி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9.30 மணியளவில் நடந்த பாதுகாப்புச் சோதனையின்போது மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணி ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த ஆடவர் துப்பாக்கியை எடுத்து அதிகாரியிடம் சோதனைக்காக கொடுத்தபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடந்தது. அதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.
அந்தப் பயணி உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கரைச் சேர்ந்த கம்லேஷ் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கம்லேஷ் ராய் தம் மனைவியுடன் மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். ஐஎக்ஸ்-1810 (IX-1810) விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த அவர், தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காலை 9.30 மணியளவில் பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டபோது அந்தச் சம்பவம் நடந்தது. இதில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்குக் காலிலும் அருகே நின்றிருந்த மற்றோர் அதிகாரிக்கு கட்டை விரலிலும் காயம் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பயணி துப்பாக்கியைத் தவறுதலாகப் பிடித்ததால்தான் சுடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர்க் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் வாரணாசி விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.


