புத்தகங்களுக்கு மரியாதை அளியுங்கள்: இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்து

புத்தகங்களுக்கு மரியாதை அளியுங்கள்: இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்து

படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

17 Nov 2026 - 6:32 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள 135 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்திய செயலக நூலகத்தில் இருந்து ஏறக்குறைய 8.5 லட்சம் புத்தகங்களை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில், இந்திய அரசை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

இந்திய அரசின் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் சாஸ்திரி பவன் கட்டடம் இடிக்கப்பட உள்ளதால், அங்குள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், அந்த இடமாற்றம் குறித்த முறையான திட்டமிடலோ பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது.

நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்ட விசாரணையின்போதே, புத்தகங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

“இது ஒரு மாபெரும் பாரம்பரியச் சின்னம். 1702ஆம் ஆண்டு வரையிலான அரிய சேகரிப்புகள் உள்ளன.

“எட்டரை லட்சம் புத்தகங்கள் வீணாக வீசப்படுகின்றன. உங்களுக்கு அவை தேவையில்லை என்றால், அவற்றைப் பாதுகாத்து மதிக்கக்கூடிய வேறு ஏதேனும் நாட்டிற்கு வழங்குங்கள்,” என்று நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், முறையான திட்டமிடல் இல்லாத இந்த இடமாற்ற நடவடிக்கைக்கு நவம்பர் 20ஆம் தேதி வரை தடை விதித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்