தொடங்கியது சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம்

1 mins read
f2393dac-2c10-4240-bd3d-0fc0693dbb9d
சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குப் புறப்பட்டது லக்னோவில் கொண்டாடப்பட்டது. - படம்: பிடிஐ
multi-img1 of 2

லக்னோ: விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வரலாற்றில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது நபராவார்.

அவர், புதன்கிழமை (ஜூன் 25) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபேல்கன் 9 விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டார். அவரின் சாதனையை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.

சுபான்ஷு சுக்லா லக்னோவில் பிறந்து உத்தரப் பிரதேசத்தின் அல்காஞ்ச் நகரின் சிட்டி மான்டிசோரி பள்ளியில் கல்வி பயின்றவர்.

அவர் ஈடுபட்டுள்ள ஏக்சியொம் 4 விண்வெளிப் பயணத்தின்போது விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது நேரடியாக ஒளிபரப்பானதைக் கண்டு மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். குழுத் தலைவர் கேப்டன் சுக்லாவுக்கு முன்பு, 1984ஆம் ஆண்டில்தான் மற்றோர் இந்தியரான ராக்கே‌ஷ் சுக்லா விண்வெளிக்குச் சென்றார்.

மேலும், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையும் சுபான்ஷு சுக்லாவைச் சேரும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

சுபான்ஷு சுக்லாவின் தந்தையான சாம்பு சுக்லா, “இது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே பெருமையான தருணம். இப்போது என்ன சொல்வதென்றால்... எனக்கு வார்த்தைகள் வரவில்லை. என் மகனுக்கு எனது ஆசிர்வாதம் என்றும் இருக்கும்,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்