பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாள்களாக நீடித்து வந்த அதிகாரப் பகிர்வு இழுபறி ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
அம்மாநில முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை (மே 28) தமது பதவியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்திக்க அவர் நேரம் கேட்டிருப்பது கிட்டத்தட்ட அம்முடிவை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதற்கு முன்பாக, அவர் தமது இல்லத்தில் அமைச்சர்களுக்கு காலை உணவு விருந்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
2023 சட்டமன்றத் தேர்தலின்போது போடப்பட்ட இரண்டரை ஆண்டுகால அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, இப்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அடுத்த முதல்வராகப் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நம்பிக்கையைப் பெற்றதன் மூலம் டி.கே.சிவகுமார் அந்த வாய்ப்பை உறுதிசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் அறிவுறுத்தலை ஏற்று உடனடியாகப் பதவி விலகச் சம்மதித்த சித்தராமையா, ஜூன் 1ஆம் தேதிவரை காத்திருக்காமல் தற்போதே விலக முடிவெடுத்துள்ளார்.
2029ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சித்தராமையாவைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கட்சியின் முதன்மையான பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முகமாக அவரை முன்னிறுத்தி, அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கவும் முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பு ஒப்படைப்பு சுமுகமாக நடைபெறுவதற்காக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பெங்களூருக்கு விரைந்துள்ளார்.
எனினும், சித்தராமையா - சிவகுமார் ஆதரவாளர்களிடையே நிலவும் உட்கட்சிப் பூசலைத் தவிர்ப்பது காங்கிரஸ் மேலிடத்திற்குப் பெருஞ்சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

