பெங்களூரு: பாஜக, மஜத கட்சிகள் நான் பதவி விலக வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. பாஜகவினர் நினைப்பதுபோல் எனக்கு எவ்வளவுதான் நெருக்கடி கொடுத்தாலும் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு இருக்கும்வரை நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா மீதான நிலமுறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்தது சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் கையகப்படுத்தியது.
அதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட, அந்த நிலத்திற்காக வழங்கப்பட்ட சித்தராமையாவின் மனைவிக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகம் என்பதால் முதல்வர் சித்தராமையா மீது முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
அந்தப் புகார் தொடர்பாகச் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். இதற்கு எதிராகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சித்தராமையா, ஆளுநர் தனது அதிகாரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தியதாக முறையிட்டார். ஆளுநரின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அவர் மனுச் செய்தார்.
அந்த மனுவைச் செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘‘ஊழல் தடுப்பு சட்டம் 17 (ஏ) பிரிவின் கீழ் ஆளுநருக்குச் சுதந்திரமாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. எனவே சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளித்தது சட்டப்படி சரியானது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே விசாரணை அமைப்பினர் இவ்வழக்கில் சித்தராமையாவை விசாரிக்கத் தடை எதுவும் இல்லை’‘ என்று உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், சித்தராமையாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளுநர் அனுமதி அளித்ததை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் தார்மீக அடிப்படையில் சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, “இந்த வழக்கு முழுக்க முழுக்கப் பொய்யாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவும் மஜதவும் ஒன்றிணைந்து எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளன. சட்டப்படி என்மீதான வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் மேலிடமும் சட்டமன்ற உறுப்பினர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, முதல்வர் பதவியிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என்று கூறியுள்ளார்.

