புதுடெல்லி: இந்தியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுக்குழுக் கூட்டம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த நான்கு ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வீச்சு குறித்து ஆழமான உரையாடல்களை இந்தியா எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார்.
தற்காப்பு, கடல்சார், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், மருந்துத் துறை, உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த ஜனவரி 2001ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் கூட்டு ஆணைய அமைப்பு நிறுவப்பட்டது.
2018ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜகார்த்தா பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவுகளை ஒரு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தின.
இது தற்காப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-இந்தோனீசியா இடையேயான கூட்டுக் குழுக்கூட்டம் 8வது முறையாக டெல்லியில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, விரிவான, உத்திபூர்வப் பங்காளித்துவத்தை மீளாய்வு செய்ய, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவும் இந்தோனீசியாவும் கலாசாரம், காலனித்துவ வரலாறு, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் இறையாண்மை, பொருளியல் தன்னிறைவு, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகிய இலக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த உறவுகள் தற்போது மேலும் நுட்பமான அரசியல், பொருளியல், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புத் தளங்களில் விரிவடைந்துள்ளன.
இத்தகைய சூழலில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். புதுடெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

