புதுடெல்லி: சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக் கருதி மின்சார வாகனங்களில் எச்சரிக்கை ஒலிக் கருவி (ஏவிஏஎஸ்)பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்க இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதற்கான வரைவுத் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
புதிதாகத் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் அடுத்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குள்ளும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மின்சார வாகனங்கள் 2027 அக்டோபர் 1ஆம் தேதிக்குள்ளும் அந்த ஒலிக் கருவியைப் பெற்றிருக்க வேண்டும் என அந்த வரைவுத் திட்டம் வலியுறுத்துகிறது.
பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் எல்லா நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கும் இதனைக் கட்டாயமாக்க அமைச்சு திட்டமிடுகிறது.
மின்சார வாகனங்கள், மணிக்கு 20 கிலோமீட்டர் என்னும் குறைவான வேகத்தில் செல்லும்போது அருகில் இதர வாகனங்களோ மனிதர்களோ வந்தால் மின்சார வாகனம் ஒலி எழுப்ப வேண்டும் என்பது அந்தத் திட்டம்.
மின்சாரத்தில் இயங்காத, தற்போது நடப்பில் உள்ள வாகனங்கள் ஓரளவு இரைச்சலுடன் செல்வது வழக்கம்.
ஆனால், மின்சார வாகனங்கள் ஓசையின்றி இயங்குகின்றன. அதனால், அந்த வாகனம் வருவதை அறியாமல் மனிதர்களும் வாகனங்களும் குறுக்கே சென்று விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
அமெரிக்க போக்குவரத்துத் துறை நடத்திய ஆய்வு, ஓசையற்ற மின்சார வாகனங்களால் நடந்து செல்வோர் விபத்தில் சிக்க 20 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அந்த வாகனங்கள் குறைவான வேகத்தில் செல்லும்போது பொதுமக்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எனவே, மின்சார வாகனங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்புவதையும் அதற்கான கருவி அந்த வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும் என்பதையும் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கெனவே கட்டாயமாக்கி உள்ளன.