அயோத்தி போலவே பத்ரிநாத் கோவிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணைக்கு உத்தரவு

அயோத்தி போலவே பத்ரிநாத் கோவிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணைக்கு உத்தரவு

1 mins read
c68c8a51-4716-4138-8fdc-bdc08340ae5e
பத்ரிநாத் கோவில். - கோப்புப் படம்: டெக்கான் ஹெரால்ட்

டேராடூன்: அயோத்தி ராமர் கோவில், மதுரா கோவில் ஆகியவற்றையடுத்து, பத்ரிநாத் கோவிலிலும் காணிக்கை முறைகேடு நிகழ்ந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகிவரும் நிலையில், விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார்.

புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இந்த விவகாரத்தைக் கோவில் நிர்வாகம் தீவிரமாகக் கருதுகிறது என்றும் ஹேமந்த் திவேதி கூறினார்.

அயோத்தி, மதுரா கோவில்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளைச் சிலர் திருடியதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், பத்ரிநாத் புண்ணியத் தலத்திலும் இதேபோன்று முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் திரு திவேதி தெரிவித்தார். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்கள், கண்காணிப்புக் கேமராவில் உள்ள பதிவுகள், பலரது வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணைக் குழு தனது அறிக்கையை அளிக்கும் என பிகேடிசி தலைமைச் செயல் அதிகாரி ஷோகன் சிங் ரங்கட் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவில் சட்டத்தின்கீழ் குற்றவாளிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே, விசாரணை முடியும் வரை தவறான, உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளைப் பரப்ப வேண்டாமென அனைத்துத் தரப்பினருக்கும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்