2030ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பசுமை குறிக்கோள்களை ஆதரிக்கும் விதமாக அந்நாடு, சிங்கப்பூருடன் கூட்டுத்திட்டங்களில் இணைந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகையின்போது அவரை ‘யுனிவர்சல் சக்செஸ் என்டர்பிரைசஸ்’ எனப்படும் ‘யுஎஸ்இ’ குழுமத்தின் தலைவர் நபிரசூன் முகர்ஜி சந்தித்தார்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பூங்காக்களை அமைத்து முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அத்துடன், நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்களை அமைத்து கரிமப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் இந்தியாவின் இலக்கை அந்நிறுவனம் ஆதரிக்க உள்ளது.
சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘யுஎஸ்இ’ குழுமம் தற்போது குஜராத்தில் 500 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா, உத்தர பிரதேஷ், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் தளவாடப் பூங்கா, அசாமில் தரவு நிலையம் ஆகியவற்றை அமைக்க உள்ளது.
திரு மோடியின் வருகையின்போது இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களது உறவைப் பரந்த உத்திபூர்வ பங்காளித்துவ (comprehensive strategic partnership) நிலைக்கு மேம்படுத்தியுள்ளது. இதனைப் பிரதிபலிக்கும் விதமாக, இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் ஒன்று, பகுதி மின்-கடத்தித் துறையுடன் தொடர்புடையது.
வளர்ந்துவரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னுதாரணமாகத் திகழ்வதாகக் கூறிய திரு மோடி, மேலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க வேண்டும் என்று குறிக்கோளை இந்தியா கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் சந்தித்ததை அடுத்து சிங்கப்பூரின் தலைசிறந்த வரத்தகத் தலைவர்களை வட்டமேசை கூட்டம் ஒன்றில் சந்தித்தார்.
இந்தியாவல் முதலீட்டு, புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை ஆராயும்படி சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களை ஊக்குவித்தார்.

