எஸ்ஐஆர் நடவடிக்கை அரசியலமைப்பு உரிமையை அழிக்கும் ஆயுதம்: ராகுல் காந்தி

2 mins read
f9b62184-72e2-423b-8ea1-0dd89ae8a43e
ராகுல் காந்தி. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பல்ல என்றும் வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கியமான சதிகாரரைப்போல் அந்த ஆணையம் செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின் மூலம் அரசியலமைப்பு உரிமையை அழிப்பதற்கான ஆயுதமாக அது மாற்றப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்லாம் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை பாஜகதான் தீர்மானிக்கிறது, மக்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இது ஒரு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, தந்திரமான வாக்குத் திருட்டு நடவடிக்கை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் குறிப்பிட்ட சமூகங்கள், வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குகளைத் தேர்ந்தெடுத்து நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாஜக எங்கெல்லாம் தோல்வியுறும் என்று கருதப்படுகிறதோ, அங்கெல்லாம் இத்தகைய முறைகேடு நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பு கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் அரங்கேற்றப்பட்ட இந்தத் திட்டத்தை இப்போது குஜராத், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலத்திலும் அரங்கேற்றுகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எங்கெல்லாம் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எங்கெல்லாம் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். - படம்: ஏஎஃப்பி

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து: அமர்த்தியா சென்

இதனிடையே, மேற்கு வங்கத்தில் ‘எஸ்ஐஆர்’ பணி அவசர கதியில் மேற்கொள்ளப்படுவதாக நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

இத்தகையச் செயல்பாடு ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை அடுத்து அமர்த்தியா சென் விசாரணைக்காக நேரில் முன்னிலையாக வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், போதுமான கால அவகாசம் அளித்து மிகக் கவனமாக வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இதுதான் நல்ல ஜனநாயக நடைமுறை என்றும் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.

“என் சொந்தத் தொகுதியான சாந்திநிகேதனில் முன்பு வாக்களித்த இடத்தில், எனது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் அதே இடத்தில் வசித்து வந்தாலும், தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி விசாரணைக்கு அழைத்தது,” என்று திரு அமர்த்தியா சென் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது நண்பர்கள் உதவியுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக குறிப்பிட்டுள்ள அமர்த்தியா சென், இவ்வாறு உதவி கிடைக்காத குடிமக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்