புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்போது கடிதங்கள் அனுப்பப்படுவதால் மட்டுமே ஒருவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகக் கருதமுடியாது என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் பலருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இது சமூக ஊடகங்கள், அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தனது மௌனத்தைக் கலைத்துள்ளது.
அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், “வாக்காளர் விவரப் படிவங்களில் காணப்படும் வயது, முகவரி அல்லது முந்தைய பதிவுகளுடனான இணைப்பு போன்ற தரவு முரண்பாடுகளை மட்டுமே இந்தக் கடிதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உரிய விசாரணை நடத்தப்படாமலும் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு வழங்கப்படாமலும் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏறக்குறைய 97 லட்சம் வாக்காளர்களில், 33.13 லட்சம் பேரின் படிவங்களில் இத்தகைய தொழில்நுட்ப முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, இதுவரை 31.63 லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெளிவுபடுத்தி உள்ளது.
கடிதங்கள் பெற்ற வாக்காளர்கள் உரிய சான்றுகளை இவ்வாண்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்து தங்கள் பதிவை உறுதிசெய்து கொள்ளலாம் என்றும் தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அனைத்துச் சரிபார்ப்பு நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
