தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ பணிகள் சரியானதே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ பணிகள் சரியானதே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
53a4a8cd-c8d1-4b98-9b05-c912bf78b6d9
ஜார்க்கண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடைபெறவிருப்பதால் மே 23 அதிகாரிகள் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தனர். - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: எஸ்ஐஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பீகாரில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1950ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, இவ்வளவு பரந்த அளவில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை (மே 27) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், “சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. எந்தவொரு சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதியிலான விதியை தேர்தல் ஆணையம் மீறவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது என்பது சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையைப் பறிப்பதாக அர்த்தமாகாது,” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

“வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அது சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். குடியுரிமையை நிரூபிக்க இயலாத காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட்ட நபர்களை, உரிய சட்டரீதியான விசாரணைக்காக தகுந்த அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும்.

“சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது,” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் முதலில் பீகாரில் தொடங்கியது.

இதையடுத்து, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்