லண்டன்: இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய நாயகன் கிடைத்திருக்கிறார். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட முகமது சிராஜ்தான் அந்த நாயகன்.
பல ஆண்டுகளின் உழைப்புக்குக் கிடைத்த பலன் அந்தப் புதிய அங்கீகாரம். இதுவரை இந்தியாவின் அண்மை வெற்றிகளுக்குப் பந்துவீச்சாளர்கள் காரணம் என்று வரும்போது பெரும்பாலும் அனைவரின் நினைவிலும் வருவது ஜஸ்ப்ரிட் பும்ராவின் பெயர்தான். இங்கிலாந்துத் தொடருக்கு முன்புவரை பும்ராவுக்குத் துணையாகப் பந்துவீசுபவர் என்றுதான் சிராஜ் கிரிக்கெட் வல்லுநர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்டார். ஆனால் அந்தக் கருத்தைப் பொய்யாக்கிச் சிகரம் தொட்டுள்ளார் சிராஜ். பும்ராவின் நிழலாக இருந்த சிராஜ் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரவி ஷாத்ரி உட்பட பலரும் சிராஜுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஹேரி புரூக் முதலியோரும் அவரின் சிறப்பான பந்துவீச்சைப் பாராட்டியுள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்துத் தொடரில் பும்ராவால் மூன்றில்தான் விளையாடமுடியும் என்ற நிலை. எஞ்சிய இரண்டிலும் முன்னணிப் பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட சிராஜ் தனது பந்துவீச்சில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறினார்.
இந்தத் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை படைத்தார். அது மட்டுமல்ல ஐந்து போட்டிகளிலும் அசராமல் 185.3 ஓவர்களை அவர் வீசினார். சுறுசுறுப்போடு பந்துவீசிய சிராஜ் இங்கிலாந்து ஆட்டக்காரர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று எனும் முன்னணியில் இருந்தது இங்கிலாந்து. இந்நிலையில் ஐந்தாம் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனின் ஓவல் திடலில் தொடங்கியது.
இந்தியா முதல் இன்னிங்சில் 224 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 247 ஓட்டங்களைச் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ஓட்டங்களைக் குவித்தது. 374 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஹேரி புரூக் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் அடித்த பந்தைப் பிடித்தபோதும் சிராஜ் எல்லைக் கோட்டைக் கடந்ததால் வாய்ப்பை நழுவவிட்டிருந்தார். பின்னர் அடித்து விளாசிய புரூக் இறுதியில் 111 ஓட்டங்களைக் குவித்தார். அப்போது தோல்விக்குத் தாமும் ஒரு காரணமாகிவிடுவோமோ என்று சிராஜ் நினைத்திருக்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்தாம் நாள் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு வெற்றிபெற 35 ஓட்டங்களே தேவைப்பட்டன. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை ஜேமி ஓவர்ட்டன் அடித்ததால், வெற்றி இலக்கு 27க்குக் குறைந்தது. பெரும் நெருக்கடிக்கு இடையில் புயலெனப் புறப்பட்ட சிராஜ், 25 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மனம் தளராமல் பந்துவீசியதற்கான காரணத்தையும் செய்தியாளர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார் சிராஜ். இறுதி நாளன்று காலையில் போர்ச்சுகலின் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோவின் படத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்ததாக அவர் சொன்னார். அந்தப் படத்தில் “நம்புங்கள்” என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்து நம்பிக்கையோடு பந்துவீசிய சிராஜ், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு தொடரைச் சமன் செய்யவும் உதவியிருக்கிறார்.