புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72).
இந்நிலையில் யெச்சூரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று அக்கட்சி ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
சீதாராம் யெச்சூரிக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி தீவிரக் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் அவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீதாராம் யெச்சூரி விரைவில் உடல் நலம்பெற வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள் முதலியோர் சமூக ஊடகங்களில் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
சீதாராம் யெச்சூரி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். மாணவப் பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் யெச்சூரி, மேற்கு வங்க மாநிலத்தில் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

