தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகா கும்பமேளாவில் இரு நாள்களில் புனித நீராடிய ஆறு கோடி பேர்

2 mins read
e6c5bfdb-f3fc-492d-9fa6-cd1eae39db77
வரும் 29ஆம் தேதி அமாவாசையன்று பத்து கோடி பக்தர்கள் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஊடகம்

பிரயாக்ராஜ்: கும்பமேளாவில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் புனித நீராடியவர்கள் எண்ணிக்கை ஆறு கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய மகா கும்பமேளாவில் முதல் நாளன்று ஒன்றரை கோடிக்கு மேற்பட்டோர் புனித நீராடினர்.

இரண்டாம் நாளன்று ‘அமிர்த குளியல்’ என்ற புனித நீராடும் நிகழ்ச்சியில் மூன்றரை கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யதாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகா கும்பமேளா தொடங்கிய இரண்டு நாள்களில் மட்டும் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 29ஆம் தேதி அமாவாசையன்று புனித நீராடுவது சிறப்பு வாய்ந்தது எனக் கருதப்படுவதால் அன்றைய தினம் பத்து கோடி பக்தர்கள் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் 26ஆம் தேதி மகா சிவராத்திரி அன்றும் முக்கிய புனித நீராடுதல் நிகழ்ச்சி நடக்கும். அந்த நிகழ்வுடன் மகா கும்பமேளா நிறைவடையும்.

இதற்கிடையே, கும்பமேளாவுக்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் காணாமல் போய்விட்டால் எளிதில் கண்டுபிடிக்க 50,000 மின் கம்பங்களில் ‘க்யூ ஆர் கோட்’ வசதி செய்யப்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி கைப்பேசி மூலம் காணாமல் போனவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், லட்சக்கணக்கானோர் கூடுவதால் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமாக இருப்பதை உறுதிசெய்ய, நடமாடும் உணவு பரிசோதனைக் கூடங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், கடந்த மூன்று நாள்களாக பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

நாள்தோறும் டன் கணக்கிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுக்கழிவறைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்