மத்தியப் பிரதேசம்: குடிநீர் மாசடைந்ததில் குறைந்தது பலர் உயிரிழந்ததை அடுத்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகர அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
ஏறத்தாழ 5,000 வீடுகளில் நீர்ப்பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதுடன் ஆழ்துளைக் கிணறுகள் அனைத்திலும் குளோரின் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியாளர் சிவம் வர்மா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இந்தியாவின் ஆகத் தூய்மையான நகராகப் பாராட்டு பெற்ற இந்நகரை, இந்தச் சம்பவம் உலுக்கியுள்ளது.
தூய்மைக்கேடு நேர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்பட்டோரில் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 65 பேரில் பதினைந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், 149 பேர் தற்போது சிகிச்சை பெறுவதாகவும் 205 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் திரு வர்மா கூறினார்.
நீர் மாதிரிகள் சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகளைக் கொண்ட அறிக்கைகள் வெளிவந்ததும் அவற்றின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பாகீரதபுரப் பகுதியில் நடந்த மரணங்களால் இந்தச் சம்பவம், மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. பதற்றத்தைத் தணிக்க முற்பட்டபோதிலும் மக்களில் பலர், கலன்களில் தங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் தண்ணீரின் தூய்மை குறித்தும் அவநம்பிக்கையில் இருந்தனர். இதனால் சிலர், போத்தல்களைச் சொந்தமாகவே வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.


