திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெறக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரெனத் திறக்கப்பட்ட முக்கிய நுழைவாயிலை நோக்கி ஓடியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். புதன்கிழமை (ஜனவரி 8) இரவு நடந்த அச்சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். எலும்பு முறிவு காரணமாக 12 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் அபாய கட்டத்தில் இல்லை என்று ஓர் அதிகாரி கூறினார்.
பலியானவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்தை வியாழக்கிழமை (ஜனவரி 9) பார்வையிட்ட ஆந்திர மாநில அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான கோயில் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்,” என்று கோயில் அறக்கட்டளைத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கு கோயில் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் தான் வருத்தமடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.
ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி
உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கியது
திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19ஆம் தேதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
உயிரிழந்தவர்கள்
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த லாவண்யா ஸ்வாதி 37, கண்டிபில்லி சாந்தி 35, ரஜினி 47 ஆகியோர் செவ்வாய்க்கிழமை திருப்பதிக்குச் சென்று புதன்கிழமை அதிகாலை வரிசையில் நின்று இலவச தரிசன கூப்பன்களைப் பெற்ற ஏராளமான பக்தர்களின் குழுவில் இருந்தனர்.
அவர்களது கணவர்களும் குழந்தைகளும் மற்ற வரிசையில் நின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் சாந்தியின் கணவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவர்களின் மகன் இடைநிலைக் கல்வி பயின்று வருகிறார். கூப்பன்களை வாங்கிய பிறகு, 3 பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் மறுநாள் திருமலையில் உள்ள கோவிலுக்குச் செல்ல படிகளில் ஏறத் திட்டமிட்டிருந்தனர்.
தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா 50, கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா ஆகிய இருவரும் பெண்கள் காயமடைந்த நிலையில் இரவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தனர்.
பைராகிபட்டேடாவில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த மற்றொருவர் நரசிப்பட்டினத்தைச் சேர்ந்த பாபு நாயுடு, 51. இவர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் இறந்தார். தரிசனத்திற்கான கூப்பன்களை விநியோகிக்க அமைக்கப்பட்ட பல கவுண்டர்களில் இந்த கவுண்டரும் ஒன்று.
மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் கூட்ட நெரிசலில் சிதறிக் கிடந்த மொபைல் போன்கள், பணப்பைகள், பைகளை சேகரித்து, அவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி அனுப்பும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
தரிசன டிக்கெட் பெற முதல் நாளே நீண்ட வரிசை
புதன்கிழமை (ஜனவரி 8) இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்கிடையே விஷ்ணு நிவாசம் அருகே இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. வரிசையில் இருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை வெளியேற்ற நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது. அதை அறியாத வரிசையில் நின்ற பக்தர்கள் கிட்டத்தட்ட 2,500 பேர் ஒரே நேரத்தில் நுழைவு வாயிலுக்குள் செல்ல முயன்றதால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் கூறியிருந்தாலும், கட்டுக்கடாங்காதக் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாள்களில் திருப்பதியின் 2 - 3 லட்சம் வரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வழங்க முடிவு செய்து திருமலை திருப்பதி உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டிக்கெட் பெற புதன்கிழமையே மக்கள் வரிசையில் நின்றுள்ளனர். திருப்பதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 6 பேரில் 5 பேர் பெண்கள் - இவர்கள் புத்தாண்டைத் தொடங்குவதற்காக புனிதமான வைகுண்ட ஏகாதசியின் போது திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய தங்கள் குடும்பத்தினருடன் சென்ற தாய்மார்கள் ஆவர்.
டிக்கெட் கவுண்டர்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், நெரிசல் இருந்தபோதிலும் கூட்டம் தொடர்ந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை 1.2 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் கூடுதல் கூப்பன்கள் வழங்கப்படும்.

