விஜயவாடா: ஆந்திரா, கோனசீமா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயில் கருகி அறுவர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சஞ்சா பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசுகளை தவறாகக் கையாண்டதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
அது உரிமம் பெற்ற ஆலை என்று கோனசீமா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் மீனா தெரிவித்தார்.
மாண்டோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
“சம்பவ பகுதிக்கு மூத்த அதிகாரிகள் நேரில் தனிப்பட்ட முறையில் சென்று, நிவாரணப் பணிகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் துணையாக இருப்போம்,” என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.