ஹைதராபாத்: பெங்களூரு நகரின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கர்நாடகா அரசு 250 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான ‘ஸ்கை டெக்’ கோபுரம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
கோபுரத்தின் உச்சியில் பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன. இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி இழுபறியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கொம்மகட்டா பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் கொம்மகட்டா பகுதியில் நேரில் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, 30 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பில் 250 அடி உயர கோபுரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தொழிற்பகுதி மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தைச் சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகளும் ஏரியும் அமைந்துள்ளன. நைஸ் சாலைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த இடம் ‘ஸ்கை டெக்’ கோபுரத்துடன் பயன்பாட்டிற்கு வரும் வேளையில், பெங்களூரு நகரின் சுற்றுலா அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.