புதுடெல்லி: படுக்கை வசதியுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயிலின் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இத்தகவலை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) இந்தச் சோதனையோட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அப்போது எடுக்கப்பட்ட காணொளியை தமது சமூக ஊடகப்பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சோதனை ஓட்டத்தின்போது ‘வந்தே பாரத்’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ரயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கண்ணாடி குவளைகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. வந்தே பாரத் ரயிலில் உள்ள இந்தப் புதிய தலைமுறை தொழில்நுட்ப அம்சங்களை இந்தச் சோதனையோட்டம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது,” என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் பல புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்ட நிலையில், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

