இந்தியா-மியன்மார் எல்லையில் அமைந்துள்ள லோங்வா கிராமவாசிகள் தனிச்சிறப்புமிக்கவர்கள்!
ஏனெனில், அவர்கள் இந்தியா, மியன்மார் என இருநாடுகளின் குடியுரிமையையும் பெற்றுள்ளனர்.
இந்தப் பெருமைக்குரிய சிற்றூரைப் பற்றி நாகலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளி பதிவிட்டுள்ளார்.
அவரது வார்த்தைகளில் சொல்வதென்றால், அவ்வூர்வாசிகள் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்காகப் படுக்கையறைக்குச் செல்வதே எல்லையைக் கடப்பதுபோலத்தான்!
நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய சிற்றூர்களில் லோங்வாவும் ஒன்று. அங்கு 'கொன்யாக் நாகர்கள்' எனும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில்லை. ஆயினும், லோங்வாவாசிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வூரின் மக்கள்தொகை 6,703. அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவிலும் மியன்மாரிலும் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.
"இது என் இந்தியா. இந்த மனிதர் (கொன்யாக் நாகர் இனத்தலைவர்) படுக்கையறைக்குச் செல்ல வேண்டுமெனில் எல்லையைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, 'உறங்குவது இந்தியாவில், உண்பது மியன்மாரில்' எனும்படியாக இருக்கிறது," என்று அமைச்சர் அலோங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1970ஆம் ஆண்டு இந்தியா-மியன்மார் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பிருந்தே லோங்வா இருந்து வருவதாக பிபிசி செய்தி குறிப்பிடுகிறது. எல்லை வகுத்த அதிகாரிகள், அச்சமூகத்தைப் பிரிக்க விரும்பவில்லை. இரு நாடுகளுக்குமான எல்லைக்கோடு அவ்வூர் வழியாகச் செல்ல அவர்கள் அனுமதித்தனர்.
இதன் விளைவாக, எல்லையின் ஒரு தூணில் பர்மிய மொழியிலும் இன்னொரு தூணில் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது. கொன்யாக் நாகர் இனத் தலைவரின் வீடு வழியாக எல்லைக்கோடு செல்வதால், அவர் இந்தியாவில் உறங்குவதாகவும் மியன்மாரில் உண்பதாகவும் நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு 60 மனைவிகள் இருப்பதாக இந்திய இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

