பெங்களூரு துயரம்: சிறிய நுழைவாயிலுக்குள் முண்டியடித்த பெருங்கூட்டம்

2 mins read
7cdc3502-92b2-42fb-9363-44e82b0e40a2
கூட்ட நெரிசலால் விழுந்த தடுப்புகளுக்குக் கீழ் பலர் சிக்கிக்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: இந்தியப் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணிக்காக சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்ற அறிவிப்பு புதன்கிழமை (ஜூன் 4) ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான கூட்டம், விளையாட்டு அரங்கின் குறுகிய நுழைவாயில் ஆகிய காரணங்களும் குறிப்பிடப்பட்டன.

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மாண்டனர், 47 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது.

- படம்: ஏஎஃப்பி

பாராட்டு நிகழ்ச்சிக்காக எப்படியாவது விளையாட்டு அரங்கத்துக்குள் சென்றுவிடவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் முந்திக்கொண்டு விரைந்ததாகக் காவல்துறையும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர்.

18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரிமியர் லீக் போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதால் பலரும் நெகிழ்ச்சியடைந்ததோடு பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பேரார்வம் காட்டினர்.

பல ஆண்டுக்குப் பின் பெங்களூரு அணிக்குக் கிடைத்த வெற்றியை ஆயிரக்கணக்கானோர் கொண்டாடினர்.
பல ஆண்டுக்குப் பின் பெங்களூரு அணிக்குக் கிடைத்த வெற்றியை ஆயிரக்கணக்கானோர் கொண்டாடினர். - படம்: ஏஎஃப்பி

தொடக்கத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டன. சிலரால் மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதையடுத்து அனைவரும் விளையாட்டு அரங்கில் அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பை அடுத்து வாயில்கள் திறந்தவுடன் கூட்டம் அலைமோதியது.

பல்லாயிரக்கணக்கானோர் அரங்கத்துக்குள் செல்ல முயன்றதோடு குறுகிய நுழைவாயில்களுக்குள் எல்லா திசையிலிருந்தும் மக்கள் விரைந்தனர். அப்போதுதான் கூட்ட நெரிசல் தொடங்கியது.

தொடக்கத்தில் மக்கள் நசுக்கப்பட்டதோடு காயமுற்றனர். கூடுதலானோர் அரங்கத்துக்குள் நுழைய முற்பட்டபோது தடுப்புகள் விழுந்தன. அவற்றுக்கு அருகில் இருந்தவர்கள் தடுப்புகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மக்கள் அவர்கள்மீது ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் காயமுற்றோரையும் சுயநினைவு இழந்தோரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். கொண்டாட்டத்தைக் காண வந்த பலர் மயங்கிவிழுந்தனர்.

முதலமைச்சர் சித்தராமையாவைப் பெங்களூரு அணி நாடாளுமன்றத்தில் சென்று சந்தித்ததை அடுத்து அதற்கு வெளியிலும் பெருங்கூட்டம் கூடியது.

பெங்களூரு அணியின் வெற்றியைக் கொண்டாட நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்.
பெங்களூரு அணியின் வெற்றியைக் கொண்டாட நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள். - படம்: ஏஎஃப்பி

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த அறிக்கை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்