தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்: ஆர்பிஐ புதிய சலுகை

2 mins read
a6b7540d-f95d-46c1-b78f-d4d83dd9bb8b
தற்போது தங்கத்தின் மதிப்பில் 75 விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நகைக்கடன் தொடர்பில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

தங்கத்தின் மதிப்பில் 85 விழுக்காடு வரை கடன் வழங்கலாம் என்று அறிவித்துள்ள வங்கி அதற்கு உச்சவரம்பையும் அறிவித்து உள்ளது. 2.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே அந்தச் சலுகை பொருந்தும் என்று அது தெரிவித்து உள்ளது.

தற்போது வரை தங்கத்தின் மதிப்பில் 75 விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விதி இருந்தது. இப்போது ஆர்பிஐ அதனைத் தளர்த்தியுள்ளது.

இது இந்திய மக்களின் எளிய, நடுத்தர வகுப்பினருக்கு சாதகமான அறிவிப்பாக கருதப்படுகிறது.

அண்மையில் நகைக்கடன் தொடா்பான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததையடுத்து, புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, புதிய விதிமுறைகளை அமலாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தங்க நகைக்கடனை ஊக்குவிக்கும் நடவடிக்கையை ஆா்பிஐ மேற்கொண்டுள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா புதிய சலுகையை அறிவித்தார்.

இனி ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு மட்டும் தங்கத்தின் மதிப்பில் 85 விழுக்காடு வரை கடன் அளிக்கப்படும் என்றும் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே அந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் பொதுத் துறை வங்கிகள் மட்டுமே நகை மதிப்பில் 75 விழுக்காடு கடன் என்பதை முறையாகக் கடைப்பிடிக்கின்றன. வங்கிசார நிதி நிறுவனங்களும் சிறிய வங்கிகளும் தங்க நகையின் மதிப்பில் அதிகபட்சமாக 88 விழுக்காடு வரை கடன் வழங்குகின்றன என்று மல்ஹோத்ரா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்