அகர்தலா: இந்திய எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான, அறிவார்ந்த எல்லைத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது.
ஆறு அண்டை நாடுகளுடன் இந்தியாவின் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதி பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
எல்லை ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், மனித, ஆயுதக்கடத்தல் என ஒவ்வொரு எல்லைப் பகுதியிலும் தனித்துவமான சவால்களைப் பாதுகாப்புப் படையின் எதிர்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, புதிய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க இந்தியா முன்னுரிமை அளிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அறிவார்ந்த எல்லைத் திட்டம் செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.
அதன்படி, அதிநவீன தொழில்நுட்பம், உள்ளூர் நிர்வாகம், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் ஒருங்கிணைப்பதாகவும் அறிவார்ந்த எல்லைத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் லங்கமுரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் அங்கு முகாமிட்டுள்ள எல்லைப் படை வீரர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது, அறிவார்ந்த எல்லைத் திட்டத்தின் மூலம் பல்வேறு குற்றச்செயல்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
“இத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உள்ளூர் நிர்வாகத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைக்கப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்வரும் 2047க்குள் நாம் வளர்ந்த நாடாக மாற, எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் அரங்கேறுவதைத் தடுக்க வேண்டும். ஊடுருவலைத் தடுப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து அவர்களை நம் நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்,” என்றார் அமித்ஷா.

