ஓராண்டுக்குள் அறிவார்ந்த எல்லைத் திட்டம் தொடங்கப்படும்: இந்தியா

ஓராண்டுக்குள் அறிவார்ந்த எல்லைத் திட்டம் தொடங்கப்படும்: இந்தியா

2 mins read
217926df-5064-4d32-9e29-08cdb1a025ef
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் ஏறக்குறைய 15,000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டுள்ளது.  - படம்: தி டிரிப்யூன்

புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஊடுருவல் இல்லாத, பாதுகாப்பான கோட்டையாக மாற்றுவதற்கு இந்திய அரசு அறிவார்ந்த எல்லைத் திட்டத்தைச் செயல்படுத்தும் என அதன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் நவீன ஆளில்லா வானூர்திகள், ரேடார், கேமராக்கள், பிறத் தொழில்நுட்ப வளங்கள் இடம்பெறும் என்று டெல்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஓராண்டுக்குள், அறிவார்ந்த எல்லை என்ற கருத்துருவின்கீழ், எல்லைப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அமைப்பில் அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்க முடியும் என திரு அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இதன்வழி, அசைக்க முடியாத எல்லைப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிகள் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் ஏறக்குறைய 15,000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் அமைச்சர் அமித்ஷா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அண்டை நாடுகளில் இருந்து நிகழும் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் போன்ற தேச விரோதச் செயல்களுக்கு அறிவார்ந்த எல்லைத் திட்டத்தின்கீழ் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், பங்ளாதேஷ், சீனா, நேப்பாளம், பூட்டான், மியன்மார் ஆகிய ஆறு அண்டை நாடுகளுடனான எல்லைப்புற விவகாரங்கள் இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், எல்லைப் பாதுகாப்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவது, எதிரிகளின் டிரோன் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பது, விரிவான, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை ஆகிய நடவடிக்கைகள் அறிவார்ந்த எல்லைத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என்றார் அமித்ஷா.

மாநிலக் காவல்துறை, மத்திய ஆயுதப் படைகள், உளவுத்துறை அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை என்றும் அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

“கடந்த 1965ஆம் ஆண்டில் 25 பட்டாலியன்கள், குறைந்த வளங்களுடன் தொடங்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை, தற்போது ஏறத்தாழ இரண்டு லட்சத்து எழுபதாயிரம் வீரர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையாக உருவெடுத்துள்ளது.

“எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக அரசு விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ஊடுருவலைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஊடுருவும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்து நாட்டை விட்டு வெளியேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது,” என்றார் அமித்ஷா.

குறிப்புச் சொற்கள்