புதுடெல்லி: உலகளவில் ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைப் பாதிக்கக்கூடிய கண்புரை நோய், பார்வை இழப்பிற்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
குறிப்பாக, கண் மருத்துவ நிபுணர்களின் சேவை குறைவாக இருக்கும் வசதியற்ற கிராமப்புறப் பகுதிகளை அந்நோய் கடுமையாகப் பாதிக்கிறது.
அந்த நிலைக்கு முடிவுகட்டும் விதமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியான டாக்டர் பிரபு கிருஷ்ணா ரவில்லாவும் அவரது குழுவினரும் ‘ஆண்ட்ராய்ட்’ கைப்பேசியில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
குறைந்த இணைய வேகம் கொண்ட பகுதிகளிலும் தொலை மருத்துவத்திற்குப் பயன்படும் கைப்பேசிச் செயலியுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலி ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இச்சாதனம், திறன்பேசியின் விலையுடன் சேர்த்து 16,000 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது. திறன்பேசியில் எடுக்கப்படும் படங்களைத் தூரத்தில் இருக்கும் மருத்துவர்கள் ஆய்வுசெய்வதும் நேரடியாகச் சென்று கண் பரிசோதனை செய்துகொள்வதும் கண்புரை நோயையும் பிற கண் கோளாறுகளையும் கண்டறிவதில் ஒரே அளவிலான துல்லியத்தைத் தருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற ‘ஐரோப்பிய கண்புரை நோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின்’ 44வது மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் ரவில்லா, இந்த ஆய்வின் முடிவுகள் மூலம் தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குப் கண்புரை நோய், கண்சதை வளர்ச்சி மற்றும் பிற கண் நோய்களைக் கண்டறிய முடியும் என்று கூறினார்.
தற்போது இந்தியாவின் கிராமப்புற மக்களைச் சென்றடைவதற்கான முதன்மை மாதிரியாகக் கண் முகாம்களே இருந்து வருகின்றன.
நகர்ப்புற மருத்துவமனைகளிலிருந்து கண் மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கிராமப்புறங்களுக்குப் பயணம் செய்து தற்காலிக முகாம்களை நடத்துகின்றனர்.
ஆனால், அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதிகச் செலவு, ஒருங்கிணைப்பதில் சிரமங்கள், மருத்துவ நிபுணர்களின் வருகையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பது, தேவைப்படுபவர்களில் ஒரு சிறிய பகுதியினரை மட்டுமே சென்றடையக் கூடியது ஆகியன அந்தச் சிக்கல்கள்.
கண் முகாம்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் கிராமப்புற மக்களில் 7 விழுக்காட்டு கிராம மக்களே பரிசோதனைக்கு வந்தனர் என்றும் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் வாழ்பவர்களின் வருகை 80 விழுக்காடு குறைந்ததாகவும் அரவிந்த் கண் மருத்துவமனை இதற்கு முன்னர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
மேலும், முகாம்களில் பங்கேற்காதவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கண்புரை நோய்க்கான அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டது.
பெண்கள், முதியோர் மற்றும் மிகவும் ஏழைச் சமூகத்தினரே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முகாம் போன்ற வெளிக்களப் பணிகள் முடங்கியதால் நிலைமை மேலும் மோசமானது.
“குறைந்த விலையிலான, பயன்படுத்த எளிதான திறன்பேசியின் புகைப்படக் கருவி மூலம் குறைந்தபட்ச கண் மருத்துவப் பயிற்சி பெற்ற சமூகச் சுகாதாரப் பணியாளர்களே களத்தில் துல்லியமான கண் படங்களை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம்.
“அந்தப் படங்களைத் தூரத்தில் இருக்கும் கண் மருத்துவர்கள் ஆய்வு செய்ய முடியும். அதன் மூலம் ஒவ்வொரு பரிசோதனை முகாமிலும் ஒரு மருத்துவ நிபுணர் நேரில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது,” என்று டாக்டர் ரவில்லா கூறினார்.

