பெங்களூரு - சென்னை விமானத்தில் புகை; பயணிகள் அவசர வெளியேற்றம்

பெங்களூரு - சென்னை விமானத்தில் புகை; பயணிகள் அவசர வெளியேற்றம்

1 mins read
a895355d-fc31-4b71-870a-155fa2eaedce
அவசரமாக வெளியேறியபோது பயணிகள் இருவர் லேசாகக் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிடிஐ

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலுள்ள கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (மே 26) இரவு சென்னைக்குப் புறப்படத் தயாரான இண்டிகோ விமானத்தில் (6E 6017) திடீரென புகை கிளம்பியது.

ஏர்பஸ் ஏ321 நியோ வகையைச் சேர்ந்த அந்த விமானம் ஓடுபாதையை நோக்கிச் சென்றபோது அதிலிருந்து புகை வந்தது கண்டறியப்பட்டது.

பாதுகாப்பு கருதி பயணிகளும் ஊழியர்களும் அவசரகால சறுக்குப்பாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். அப்போது, பயணிகள் இருவர்க்கு லேசான காயம் ஏற்பட்டதாக இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.

விமானத்தின் வலப்பக்க அவசரகாலக் கதவில் இருந்த சறுக்குப்பாதை சரியாக வேலை செய்யாததால் பயணிகள் சிலர் விமானத்தின் இறக்கைமீது அச்சத்துடன் நடந்து, மீண்டும் விமானத்திற்குள் சென்று வெளியேறியதாகப் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பிற்கே தாங்கள் முன்னுரிமை அளிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து டிஜிசிஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த விமானம் ஆய்விற்காகத் தற்காலிகமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்