தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை சென்ற விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்

2 mins read
7a95d0bb-69d1-4861-b6be-b6cf6169a1da
விமானத்தின் கழிவறைக்குள் உள்ள மின்கம்பிவடப் பெட்டிக்குள் கறுப்பு நாடாவால் சுற்றப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள். - படங்கள்: இந்திய ஊடகம்

சென்னை: அபுதாபியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நாலரைக் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்யத் தொடங்கினர். அப்போது, விமானத்தின் கழிவறையில் மின்கம்பிகள் அடங்கிய பெட்டி லேசாகத் திறந்திருப்பதை விமான ஊழியர்கள் கவனித்தனர்.

அதுபற்றி உடனடியாக சென்னை விமான நிலைய மேலாளருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து சோதனையிட்டபோது, கம்பிவடப் பெட்டி இருந்த பகுதியில் கறுப்பு நாடா சுற்றப்பட்ட ஒரு பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், 4.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்த பொட்டலத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனைத்துலகச் சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தங்கக் கட்டிகள் கடத்தலில் தனிநபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அந்த விமானம், பின்னர் சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்குச் செல்லவிருந்தது. இதனால், கடத்தல் பேர்வழி விமானக் கழிப்பறையில் தங்கத்தை மறைத்து, விமான நிலைய ஊழியர்கள் மூலம் பெற நினைத்தாரா அல்லது ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணியாகச் செல்லும்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு யாராவது தங்கத்தை மீட்டுச் செல்ல நினைத்தார்களா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்