தடை செய்யப்பட்ட இருமல் மருந்துக் கடத்தல்; ரூ. 2.5 கோடி ரொக்கம் பறிமுதல்

தடை செய்யப்பட்ட இருமல் மருந்துக் கடத்தல்; ரூ. 2.5 கோடி ரொக்கம் பறிமுதல்

1 mins read
dfef4bbf-d856-4735-8410-e9273317385f
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தைக் கடத்திப் பணம் சம்பாதிக்கும் மோசடியில் ரூ. 2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

மால்டா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தப்பட்டது தொடர்பில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

2024 ஜூலை 5ல் 1,500 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து போத்தல்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மால்டா, தெற்கு தினாஜ்பூர் மாவட்டக் காவல்துறையினருடன் இணைந்து, மால்டா மங்கல்பாரி பகுதியில் வாடகை வீடொன்றில் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 4 பேரையும் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்றிருந்தனர். அந்த வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியது. அதனை எண்ணுவதற்கு மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக ரூ.2.5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பறிமுதல் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், வீட்டில் இவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பிந்து சர்க்கார் கூறியுள்ளார்.

இந்தப் பணத்தின் பின்னணி, கடத்தல் கும்பல் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்இருமல் மருந்துசோதனைகைதுகாவல்துறை