அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி

1 mins read
a1dd3a70-204d-45b1-8da2-4b7f713271e8
பருவமழைக் காலத்தில் பாம்பு போன்ற ஊர்ந்துசெல்லும் உயிரினங்கள் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் அபாயம் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. - மாதிரிப்படம்

ஜான்சி: அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் அமைந்துள்ளது மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி.

அதன் அறுவைச் சிகிச்சைக்கூடப் பொறுப்பாளரான கனக் ஸ்ரீவாஸ்தவா புதன்கிழமை (செப்டம்பர் 17) அங்கு ஒரு பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அதுபற்றி வனத்துறைக்குத் தகவல் அளித்தார்.

விரைந்துவந்த வனத்துறையினர் அப்பாம்பைப் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.

இதனையடுத்து, அறுவைச் சிகிச்சைக்கூடத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்க அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பருவமழைக் காலத்தில் பாம்பு போன்ற ஊர்ந்துசெல்லும் உயிரினங்களும் மற்ற விலங்குகளும் மருத்துவமனை வளாகத்தினுள் நுழையும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதன் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சச்சின் மகோர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கல்லூரியின் அறுவைச் சிகிச்சைக்கூடத்தில் நேர்ந்த தீ விபத்தில் 18 குழந்தைகள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

அண்மையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று அறுவைச் சிகிச்சைக்கூடத்தின் மின்சுற்றுப் பலகையில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்