சென்னை: சென்னை காவல்துறை ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது ரயில் நிலையத்தில் அவரது நகைகள் பறிக்கப்பட்டதுடன் பலாத்காரமும் நடந்த சம்பவம் காவலருக்கே இந்த நிலையா என்று மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
பெண் காவலர் பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது, அவரது நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், இச்சம்பவம் நகைபறிப்பு மட்டுமல்ல, பாலியல் பலாத்கார முயற்சி என்பதும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் நடந்த விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இருட்டான பகுதியில் அவர் தனியாக நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த நபர் இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் பெண் காவலர் துணிச்சலாகக் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்ததால் பொதுமக்கள் ஓடிவந்து குற்றவாளியைப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல ரயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் பாதைகள் புதர் மண்டி, இருள் சூழ்ந்த நிலையில் இருக்கின்றன. பெண்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு இந்தப் பாதைகளின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.