அமராவதி: ஆந்திராவில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அம்மாநிலத் தகவல், தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்மையில், 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் ‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டகிராம்’, ‘வாட்ஸ்அப்’ போன்றவற்றைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றமும் இந்தியாவில் இதுபோன்ற தடைகளை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆந்திரா பரிசீலித்து வருவதாகத் திரு நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
மேலும், “சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது. அவர்கள் அதில் பகிரப்படும் சில பதிவுகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இதனால், அவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தவிர்க்க ஒரு வலுவானச் சட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது,” என ஆந்திர அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

