41% அதிகரித்த சூரிய மின் உற்பத்தி நிறுவுத்திறன்

2 mins read
9e01c3e9-1ce9-490a-899f-294eb2108b1f
சூரிய பூங்காக்கள், அல்ட்ரா சூரிய மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நடப்பாண்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: பிரிட்டானிகா

புதுடெல்லி: இந்தியாவின் சூரிய மின்சக்தி நிறுவுதிறன் கடந்த நவம்பர் மாதம் 130 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட நிறுவுதிறன் 41 விழுக்காடு அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆண்டு நிறுவுதிறன் 94 ஜிகாவாட்டாக இருந்தது குறிப்பிட்டுள்ளது.

சூரிய பூங்காக்கள், அல்ட்ரா சூரிய மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நடப்பாண்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் பல சூரிய பூங்காக்களில் 3,000 மெகாவாட்களுக்கும், அதிகமான சூரிய மின் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்கள் சுமார் 3 ஜிகாவாட் சூரிய மின் திட்டங்களுக்கு பங்களித்து வருவதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்தது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது 130 ஜிகாவாட் நிறுவுத்திறனை எட்டியுள்ள இந்தியாவின் சூரிய ஒளிமின்னழுத்தத் திறனும் அதிகரித்துள்ளது.

பெரிய நீர் மின் திட்டங்களைத் தவிர்த்து, இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலில், சூரிய ஒளிமின்னழுத்தத் திறன் 64.87% உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

சூரிய மின் பலகை விலைகள் சீராகக் குறைந்து வருவது, தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள், நிலையான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் சுத்தமான எரிசக்தி குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபரில் மட்டும் இந்தியாவில் 2,591.53 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் சேர்க்கப்பட்டது என்றும் இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.04% அதிகம் என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

காற்றாலை ஆற்றல் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. அக்டோபரில் காற்றாலைகள் மூலம் 476.12 மெகாவாட் சேர்க்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகரிப்பதற்கும் புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த வளர்ச்சி விவரங்கள் உறுதி செய்வதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

25 மாதங்களில் இல்லாத உற்பத்தி வளர்ச்சி

இந்திய தொழில்துறை உற்பத்தியானது, கடந்த நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 6.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. கடந்த நவம்பரில், 25 மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு உற்பத்தி வளர்ச்சி 6.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது.

கடந்த அக்டோபரில் உற்பத்தி வளர்ச்சி அளவு 0.5 விழுக்காடாக இருந்தது.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வளர்ச்சி விகிதம் 11.9 விழுக்காடாக உயர்ந்து இருந்தது என இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.

இந்த வளர்ச்சி தொடர வாய்ப்புள்ளதாக துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்