லக்னோ: பாகிஸ்தான், இந்தியா நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை இணையம்வழி பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கவுன்சிலராகச் செயலாற்றி வரும் தஹ்சீன் ஷாஹித் என்பவரது மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும் பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த ஆண்ட்லீப் ஜஹ்ரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இரு நாட்டிற்கும் இடையே நிலவிவரும் அரசியல் பதற்றங்களால் மணமகளுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஜஹ்ராவின் தாயார் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹைதருக்குக் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தி ஆகவேண்டும் என்ற அவரது தந்தை நிலைப்பாட்டால், இணையவழியில் திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவுசெய்தனர்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) திருமணம் நடந்தது. மேலும், தனது மனைவியை இந்தியாவிற்கு அழைத்துவர இனி எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று மணமகன் ஹைதர் நம்பிக்கை தெரிவித்தார்.

