தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லடாக் வன்முறை தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது

1 mins read
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
ffd12b9c-dcee-4338-b15f-4aa298e681b9
இளையர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்கிறது இந்திய உள்துறை அமைச்சு. - படம்: விக்கிப்பீடியா

லடாக்: சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை லடாக் காவல்துறை கைது செய்துள்ளது.

லடாக் வட்டாரத்துக்கு மாநில அங்கீகாரம் வழங்க வேண்டும், அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.

இவ்வேளையில் அவருக்கு ஆதரவு தரும் வகையில் இளையர்கள் இரண்டு நாள்களுக்குமுன் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்துக்கும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கும் தீ வைத்தனர்.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் மாண்டனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இளையர்கள் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதற்கு சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சு கூறுகிறது. அதன் அறிக்கைக்குப் பதிலளித்த சோனம், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தன்னைக் கைது செய்ய அதிகாரிகள் ஆயத்தமாகி வருவதாகக் கூறினார்.

கைது செய்யப்படுவதற்குத் தான் தயார் என்றும் ஆனால் தன்னைக் கைது செய்தால் அரசாங்கத்துக்குக் கூடுதல் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், காவல்துறையின் பரிந்துரையின் பேரில், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிறுவிய அரசு சாரா நிறுவனத்தின் வெளிநாட்டுப் பங்களிப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்