போராட்டக்காரர்களைக் காக்கவே உண்ணாவிரதம் நிறைவு: சோனம் வாங்சுக்

போராட்டக்காரர்களைக் காக்கவே உண்ணாவிரதம் நிறைவு: சோனம் வாங்சுக்

2 mins read
1098f936-90a9-4334-90b5-1989efa9b713
ஜூன் 29ஆம் தேதி தமது உண்ணாநிலைப் போராட்டத்தின் 2ஆம் நாளில் செய்தியாளர்களிடம் பேசும் சோனம் வாங்சுக். - படம்: என்டிடிவி / ஏஎன்ஐ

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாத நிலையிலும் தாம் 26 நாள்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதற்கான காரணம் குறித்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விளக்கியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்வதையும் சட்ட நடவடிக்கைகளையும் தடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்று அவர் கூறினார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது கடுமையான அடக்குமுறை பாயலாம் என்ற அச்சம் நிலவியதாகக் கூறிய அவர், அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அரசாங்கத்திடமிருந்து எழுத்துபூர்வ உறுதிமொழியைப் பெற்ற பிறகே தாம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த உறுதிமொழியை அளித்தனர்.

மத்திய அரசுடன் எந்தவித ரகசிய உடன்பாடும் செய்துகொள்ளவில்லை என்றும் திரு வாங்சுக் தெளிவுபடுத்தினார்.

கடந்த 2025ஆம் ஆண்டு லடாக்கில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கசப்பான சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய வன்முறை டெல்லியிலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே தாம் அமைதிக்கு அழைப்பு விடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

மருத்துவத் தேர்வுத் தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

மேலும் நாடாளுமன்றத்தில் தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் உறுதியளித்தது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கை குறித்துப் பேசிய அவர், அவர் விரைவில் தாமே பதவிவிலகுவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

மாணவர்கள்மீது முதல் தகவல் அறிக்கையோ சட்ட நடவடிக்கையோ பாயக் கூடாது என்பதிலேயே தாம் முழு கவனம் செலுத்தியதாகக் கூறினார்.

தனிப்பட்ட முறையில் அமைச்சரின் பதவி விலகலைவிட மாணவர்களின் பாதுகாப்பையே தாம் முக்கியமாகக் கருதியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தாம் ஒரு கைதியைப் போல நடத்தப்பட்டதாக வாங்சுக் குற்றம் சாட்டினார்.

தமக்கு கைப்பேசியோ கணினியோ பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய சூழலிலும் மாணவர்களின் நலனுக்காகவே தாம் உறுதியுடன் போராடியதாக வாங்சுக் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
இந்திய மாணவர்கள்போராட்டம்அமைச்சர்