புதுடெல்லி: எப்போதும் ஒலிமாசு நிறைந்து காணப்படும் இந்திய நகரச் சாலைகள், இனி இன்னிசை ஒலிக்கும் கச்சேரிக் கூடங்களாக மாற உள்ளன.
இனி இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ‘ஹாரன்’ (ஒலிப்பான்) சத்தத்துக்கு மாற்றாக, இந்திய இசைக் கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஒலிப்பான்களைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அனைத்து வாகனங்களிலும் இந்திய இசைக் கருவிகளின் ஒலியைத் தரும் ஒலிப்பான்கள் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும் என்றும் கூறினார்.
“புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியம் ஆகிய இசைக் கருவிகளின் இனிய ஒலியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புகிறோம்,” என்றார் நிதின் கட்காரி.