பேங்காக்: தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையே ஒரு முக்கிய பாலமாக பிம்ஸ்டெக் அமைப்பு செயல்படுகிறது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற 6வது பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாட்டில் கந்துகொண்டு பேசிய அவர், வட்டார இணைப்பு, ஒத்துழைப்பு, செழிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக பிம்ஸ்டெக் அமைப்பு வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை முன்மொழிந்தார் பிரதமர் மோடி.
பிம்ஸ்டெக்கை மேலும் வலுப்படுத்த, அதன் நோக்கத்தை விரிவுபடுத்தி அதன் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் இணையக் குற்றங்கள், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் பிம்ஸ்டெக் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான முதல் கூட்டத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடத்த மோடி விருப்பம் தெரிவித்தார்.
பெங்களூரை தளமாகக் கொண்ட பிம்ஸ்டெக் எரிசக்தி மையம் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பணப் பரிமாற்றத்துக்கான இந்தியாவின் யுபிஐ (UPI) தொழில்நுட்பம், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
“இத்தகைய ஒருங்கிணைப்பு வர்த்தகம், தொழில், சுற்றுலா முழுவதும் கணிசமான நன்மைகளைத் தரும், அனைத்து மட்டங்களிலும் பொருளியல் நடவடிக்கைகளை மேம்படுத்தும்.
“வணிக சமூகங்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, பிம்ஸ்டெக் வர்த்தக சபையை நிறுவ வேண்டும். பொருளியல் ஈடுபாட்டை வளர்ப்பதற்காக வருடாந்திர பொருளியல் வணிக உச்ச நிலை மாநாடு ஏற்பாடு செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“பிம்ஸ்டெக் வட்டாரத்துக்குள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஓர் ஆய்வை நடத்த பரிந்துரைக்கிறேன்,” என்றார் பிரதமர் மோடி.
சுதந்திரமான, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் என்பதே இந்தியாவின் பொதுவான முன்னுரிமை என்றார் அவர்.
பேரிடர் மேலாண்மைக்கான பிம்ஸ்டெக் சிறப்பு மையத்தை இந்தியாவில் நிறுவ முன்மொழிந்த பிரதமர் மோடி, பேரிடர் மேலாண்மை தொடர்பாக பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான நான்காவது கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் என்றார்.
பிம்ஸ்டெக் நாடுகளுக்கு புற்றுநோய் சிகிச்சையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி செய்தார்.
“விண்வெளித் துறையில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மனிதவள பயிற்சி, நானோ-செயற்கைக்கோள்களை உருவாக்குதல், ஏவுதல் மற்றும் தொலைதூர உணர்திறன் தரவுகளைப் பயன்படுத்துதலுக்காக ஒரு நிலையத்தை நிறுவ நான் முன்மொழிகிறேன்.
“பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள்.
“பிம்ஸ்டெக் என்பது ஒரு வட்டார அமைப்பு மட்டுமல்ல. இது உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கான ஒரு முன்மாதிரியாகும். இது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடுகளுக்கும் நமது ஒற்றுமையின் வலிமைக்கும் ஒரு சான்றாக உள்ளது,” என்றார் பிரதமர் மோடி.