புதுடெல்லி: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் வடஇந்தியர்களே தொடர்ந்து முன்னணியில் இருப்பதாக இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) அறிக்கை தெரிவிக்கிறது.
இவ்வாண்டு ஜூலை மாத நிலவரப்படி, வடஇந்தியாவில் மொத்தம் 43 மில்லியன் பதிவுபெற்ற பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உள்ளனர். மேற்கு இந்தியா (35 மில்லியன்), தென்னிந்தியா (24 மில்லியன்), கிழக்கு இந்தியா (14 மில்லியன்) ஆகிய வட்டாரங்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
ஆண்டு அடிப்படையில், பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கையில் வடஇந்தியாவும் தென்னிந்தியாவும் 20 விழுக்காட்டிற்குமேல் வளர்ச்சி கண்டுள்ளன.
2025 ஜூலை மாதம் வரையிலான கணக்கீட்டின்படி, தேசிய பங்குச் சந்தையில் 118 மில்லியன் முதலீட்டாளர்கள் உள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் 1.51 மில்லியன் பேர் புதிதாக அதில் முதலீடு செய்தனர். கடந்த ஆறு மாதங்களில் இதுவே ஆக அதிகம்.
அத்துடன், பங்கு வணிகக் கணக்குகளின் எண்ணிக்கையும் 230 மில்லியனாக உயர்ந்துள்ளது.
நடப்பு 2025-26 நிதியாண்டில், ஏப்ரல் மாதம் தவிர்த்து, மற்ற மாதங்களில் புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஆயினும், அது 2024-25 நிதியாண்டைக் காட்டிலும் குறைவு என அறிக்கை குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் மாதாந்தர புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 1.24 மில்லியனாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 1.98 மில்லியனாகப் பதிவானது.
அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றநிலைகளும் நாடுகள் பதிலுக்குப் பதில் வரிவிதிப்பதுமே முதலீட்டாளர் எண்ணிக்கை அதிகரிப்பு மெதுவடைந்ததற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பத்து மில்லியனைத் தொடுவதற்கு 14 ஆண்டுகளான நிலையில், அதற்கடுத்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மளமளவெனக் கூடியதாகத் தேசியப் பங்குச் சந்தை குறிப்பிட்டது.

