புதுடெல்லி: தென் கொரியப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெங்களூரு விமான நிலைய ஊழியர் கைதானார்.
இந்தியா வந்த அந்தப் பெண் மீண்டும் நாடுதிரும்ப பெங்களூரு விமான நிலையம் வந்திருந்தார்.
விமானப் பயணச்சீட்டுப் பரிசோதனை பகுதிக்குச் சென்ற அவரிடம் விமான நிலைய ஊழியர் அஃபன் அகமது என்பவர் தேவையின்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது.
அந்தப் பெண் கொண்டு வந்த பெட்டியைச் சோதனையிட்டபோது, அதற்கான இயந்திரத்தில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து தென் கொரியப் பெண் வைத்திருந்த பையைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி அருகே உள்ள ஆண்கள் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் இரு கைகளையும் பக்கவாட்டில் உயரத்தூக்கி நிற்கும்படி கூறிய அஃபன், பின்புறத்தில் இருந்து அவரைக் கட்டியணைத்து அந்தரங்க உறுப்புகளைத் தடவியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கண்டுகொள்ளாத அஃபன், ‘நன்றி’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், விமான நிலைய ஊழியர்களிடம் புகார் அளிக்க, அஃபன் அகமதுவை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் குற்றம் உறுதி செய்யப்பட்டதாகவும் அகமது மீது வழக்குப் பதிவாகியுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்தது.

