இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை ஓய்ந்தது; 2015க்குப்பின் ஆகக் குறைவு

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை ஓய்ந்தது; 2015க்குப்பின் ஆகக் குறைவு

படம்: ஏஎஃப்பி

01 Oct 2026 - 12:20 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டிற்கான தென்மேற்குப் பருவமழை 87 விழுக்காட்டுடன் ஓய்ந்துவிட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது நீண்டகால சராசரியைவிடக் குறைவு. அத்துடன், 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த மழைப்பொழிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக 868.6 மில்லிமீட்டர் மழை பெய்யும். ஆனால், இவ்வாண்டு, அதைவிட 12.6 விழுக்காடு குறைவாக, அதாவது 759.4 மில்லிமீட்டர் மழையே பெய்தது.

எல் நினோ தாக்கமே பருவமழை குறைந்துபோனதற்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, தெற்கு, கிழக்குப் பகுதிகள் எல் நினோவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக வானிலை நிலையத் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்தார்.

வழக்கத்தைவிடத் தென்னிந்தியாவில் 24 விழுக்காடும் கிழக்கிந்தியாவில் 26 விழுக்காடும் மழை குறைவாகப் பதிவாகியுள்ளது. இந்தப் பருவத்தில் கிழக்கு, வடகிழக்கு இந்தியாவில் 1,016.3 மில்லிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. 1901ஆம் ஆண்டிற்குப்பின் இதுவே ஆகக் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

மழை குறைந்தபோதும் அது நெல், பருத்தி, சோளம் போன்ற பயிர்களைத் தவிர்த்து மற்றக் கோடைக்காலப் பயிர்களின் விளைச்சலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆயினும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நீடித்த வறண்ட வானிலை காரணமாகப் பயிர் விளைச்சல் குறித்துக் கவலை எழுந்துள்ளது.

தென்னிந்தியாவில் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி நிலவரப்படி, நீர்நிலைகளின் கொள்ளளவில் பாதிக்கு மட்டுமே நீர் இருந்தது.

ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் 36 வானிலைத் துணைமண்டலங்களில் 18ல் மட்டுமே வழக்கமான மழைப்பொழிவு பதிவானது. 17 துணைமண்டலங்களில் குறைவான மழையும் ஒடிசாவில் மட்டும் கூடுதல் மழையும் பெய்தது.

இந்நிலையில், அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிடக் குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகத் திரு மொகபத்ரா தெரிவித்துள்ளார்.

எல் நினோ நவம்பரில் உச்சத்தை எட்டி, பின்னர் 2027 மார்ச் மாதத்திலிருந்து படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்